முகப்பு / ஐ.ஏ.எஸ். என்றால் தெரியும் , அது என்ன ஐ.இ.எஸ்.

ஐ.ஏ.எஸ். என்றால் தெரியும் , அது என்ன ஐ.இ.எஸ்.

ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளைப் போலவே மத்திய அரசு பணியில் இந்தியப் பொறியியல் பணி (Indian Engineering Service-IES) எனப்படும் இன்னொரு அகில இந்தியப் பணியும் இருக்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வை எந்தப் பட்டதாரியாக இருந்தாலும் எழுதலாம். எனவே, அதற்குப் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஐ.இ.எஸ். தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இத்தேர்வுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அளவுக்குக் கடுமையான போட்டி இருக்காது.

தேவையான தகுதி

சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்தான் (யூ.பி.எஸ்.சி.) ஐ.இ.எஸ். தேர்வையும் நடத்துகிறது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் பொறியியல் பட்டதாரிகள் ஐ.இ.எஸ். தேர்வை எழுதலாம். பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பைப் பொறுத்தவரையில், 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இதர மத்திய அரசு தேர்வுகளைப் போன்று எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

பணியும் பதவியும்

ஐ.இ.எஸ். தேர்வில் இந்தியன் ரெயில்வே சர்வீஸ், மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மாமென்ட் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ், சென்ட்ரல் பவர் இன்ஜினியரிங் சர்வீஸ் என்று பல்வேறு வகையான பணிகள் இருக்கின்றன. எனவே, பிடித்தமான பணியைத் தேர்வுசெய்துகொள்ள முடியும். தேர்வில் எடுக்கும் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

ரயில்வே துறை, மத்தியப் பொதுப்பணித்துறை, பாதுகாப்புத்துறை, கடற்படை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய மின்சார வாரியம், எல்லையோரச் சாலை நிறுவனம், தொலைதொடர்புத் துறை என ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளுக்கு ஏற்ப, உதவி செயற்பொறியாளர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் சேரலாம். உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கூடுதல் தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர், கூடுதல் டைரக்டர் ஜெனரல், டைரக்டர் ஜெனரல் எனப் படிப்படியாக உயர்ந்த பதவிக்குச் செல்ல முடியும்.

தேர்வைப் பொறுத்தவரையில், சிவில் சர்வீசஸ் தேர்வைப் போலவே, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என அடுத்தடுத்து 3 விதமான தேர்வுகள் உண்டு. ஆன்லைனில் (www.upsconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு மெயின் தேர்வு எழுதும் வாய்ப்பளிக்கப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம், பல்வேறு விதமான பணிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை முதலான விவரங்களை யூ.பி.எஸ்.சி.-யின் இணையதளத்தில் (www.upsc.gov.in) விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

நன்றி : தி இந்து