முகப்பு / குரூப்-4 தகுதிகள்

குரூப்-4 தகுதிகள்

பல்வேறு துறைகளுக்கான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தாளர்கள் ஆகியோரை குரூப்-4 தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பணியமர்த்தவிருக்கிறது.

 

இதுவரை, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்குத் தனியாக தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இனிமேல் குரூப்-4 தேர்வையும், வி.ஏ.ஓ. தேர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வாக நடத்த டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் முடிவெடுத்துள்ளது.

 

இந்நிலையில், மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டிருக்கிறது.

 

தேவையான தகுதி தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதலாகத் தொழிற்கல்வித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பைப் பொறுத்தவரையில் வி.ஏ.ஏ. பணிக்கு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதர பணிகளுக்கு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும் பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு இரண்டு ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

 

எனினும், தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்புக்கு மேல் (அதாவது பிளஸ் டூ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு) படித்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த கணவனை இழந்த பெண்களுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.

 

என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் இருந்து 100 கேள்விகள் (இதில் 25 வினாக்கள் திறனறிவு தொடர்புடையதாக இருக்கும்), பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.

 

தகுதி உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி டிசம்பர் மாதம் 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், கட்டணச் சலுகை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

  • குருப்-4 ஒருங்கிணைந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
  • எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி.

தமிழக அரசு ஊழியர்களுக்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, குரூப்-4 பணிகளுக்கு ஆரம்ப நிலையில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.

பணியில் இருந்தவாறே, டி.என்.பி.எஸ்.சி. துறைத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று, படிப்படியாகப் பதவி உயர்வும் பெறலாம்.