முகப்பு / மத்திய அரசுத் துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலி: மக்களவையில் தகவல்

மத்திய அரசுத் துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலி: மக்களவையில் தகவல்

மத்திய அரசில் சுமார் 4,12,752 காலிப்பணியிடங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை என்பது குறித்து இன்று நடந்த மக்களவை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் குறித்த ஆண்டறிக்கையின்படி மொத்த 36,33,935 பணியிடங்கள் உள்ளன. இதில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி சுமார் 4,12,752 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பதில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த எந்தவொரு பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.  இதற்கிடையே அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் 10,000-க்கும் குறைவான காலிப்பணியிடங்களை கொண்ட டி.என்.பி.சி. குரூப் 4 தேர்வுக்கு19.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.